இலங்கையை அதிர வைத்த விபத்து

 


கெரண்டிஎல்ல பகுதியில் சுமார் 120 அடி பள்ளத்தில் வேன் வீழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், 12 வயது சிறுவன் தனது முழு குடும்பத்தையும் காப்பாற்றியுள்ளார்.

விபத்தில் காயமடைந்த தனது தாய், தந்தை மற்றும் சகோதரியை துணிச்சலுடன் செயற்பட்டு குறித்த சிறுவன் காப்பாற்றியுள்ளார்.

கொத்மலை பகுதியைச் சேர்ந்த காமினி திசாநாயக்க தேசிய பாடசாலையில் 6ஆம் தரத்தில் கல்வி பயிலும் ஹிரனித சமரகோன் என்ற சிறுவனே இந்த துணிகர செயலை செய்துள்ளார்.

வெலிமடையிலிருந்து நுவரெலியா ஊடாக தவலந்தனை நோக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள், மகன் மற்றும் உறவினர் ஒருவர் பயணித்த வேன், அதிகாலை 1.00 மணியளவில் ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது.

அடிக்கடி விபத்துக்கள் நிகழும் இப்பகுதியில், நள்ளிரவு நேரம் என்பதால் வேன் பள்ளத்தில் விழுந்ததை வீதியால் சென்றவர்கள் கவனிக்கவில்லை.

விபத்தின் போது வேன் நசுங்கியதில் சிறுவனின் பெற்றோர் மற்றும் சகோதரி உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.

எனினும், வேனில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் ஹிரனித, தானும் காயமடைந்திருந்த போதிலும் நசுங்கிய வேனில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தனது பெற்றோரிடம் கவலைப்பட வேண்டாம், நான் உங்களை எப்படியாவது காப்பாற்றுகிறேன் என தைரியம் கூறியுள்ளார்.