நாட்டில் நிலவி வரும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியிலும், அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எந்தவொரு மின் விநியோகத்தடையையும் அமுல்படுத்தவில்லை என மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நேற்று (07) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து பொதுமக்களுக்கு ஏன் தெளிவான தகவல்கள் வழங்கப்படவில்லை என இதன்போது முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.
நாடு முழுவதும் தினமும் ஒரு மணிநேரம் அல்லது அதற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்படுவதாகப் பொதுமக்கள் முறைப்பாடு செய்து வருவதாகவும், இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் குமார ஜயகொடி, எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டினார்.
மின்சாரக் கட்டமைப்பில் ஏற்படும் திடீர் முறிவுகள் (Breakdowns) தவிர்க்க முடியாதவை என்றும், அவை நீண்டகாலமாக நிலவி வரும் ஒரு யதார்த்தம் என்றும் அவர் வாதிட்டார்.
"குறுகிய கால மின்சாரத் தடைகளை 'மின்சார முறிவுகள்' என்றுதான் அழைக்க வேண்டுமே தவிர, அவற்றை 'மின் விநியோகத்தடை' (Power Cuts) எனத் தவறாகச் சித்தரிக்க வேண்டாம்," என அவர் மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி வலியுறுத்தினார்.
