காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முணை பிரதான வீதியில் ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில், 16 வயது சிறுவன் ஒருவரை பலிகொடுத்து புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் தொடர்புடையதாக மொரட்டுவ பிரதேச செயலக பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுவனை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் வைக்குமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் 31ஆம் திகதி இரவு மண்முணை பிரதான வீதியிலுள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றில் குழு ஒன்று புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், மொரட்டுவ பிரதேச செயலகத்தின் பிரதம கணக்காளர், ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உள்ளிட்ட மொரட்டுவ, கட்டுகஸ்தோட்டை, இங்கிராக்கொட மற்றும் பொலன்னறுவை பகுதிகளைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவரை உட்பட 9 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய பூஜை பொருட்களையும் மீட்டு, காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
