எரிபொருள் QR வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு!


QR எரிபொருள் விநியோக முறைமையில் காணப்படும் அனைத்து தொழில்நுட்பத் தடைகளும் இன்று காலைக்குள் சரிசெய்யப்படும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

புதிய பதிவுகளை இலகுபடுத்தவும், முறைமையை மேம்படுத்தவும் தற்போது விசேட மென்பொருள் புதுப்பிப்புகள் (System Upgrades) முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2023 ஒகஸ்ட் மாதத்திற்குப் பிறகு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) ஊடாக சட்டப்பூர்வமாக உரிமை மாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்கு, புதிய QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதில் இருந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளன.

ஒரு QR குறியீட்டுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளர் மாறியிருந்தால் அல்லது அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பான சேவை வழங்குநர்களின் தரவுகளை உள்ளடக்கும் வகையில் முறைமை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காகப் பதிவு செய்யும் போது, இணையதளங்களில் உலாவரும் போலி இணைப்புகளை (Fraudulent Links) பயன்படுத்த வேண்டாம் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

இவ்வாறான தளங்களில் தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களை மாத்திரம் பயன்படுத்துமாறும், ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் 1919 என்ற அரசாங்க தகவல் நிலையத்தின் துரித இலக்கத்தைத் தொடர்புகொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.