நல்லதண்ணி பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த மகிழுந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், மகிழுந்து பயணித்த ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் காயமடைந்துள்ளனர் .
சிவனொளிபாத மலை யாத்திரையை முடித்துக்கொண்டு நுவரெலியா நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மகிழுந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட உறக்க கலக்கம் காரணமாக, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டை இழந்த மகிழுந்து வீதியை விட்டு விலகி, தேயிலைத் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் வீழ்ந்து புரண்டுள்ளது.
விபத்து நடந்த தருணத்தில் மகிழுந்தில் நால்வர் பயணித்துள்ள நிலையில் , மூவர் காயமடைந்துள்ளதாக நோர்வூட் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்து சமபவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
