கலன்களுக்கு எரிபொருள் வழங்கத் தடை விதிப்பு!

 


மத்திய கிழக்கு போர்ச் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை தேவையான எரிபொருள் கையிருப்புகள் இந்தியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து எவ்வித தாமதமுமின்றி இலங்கைக்குக் கிடைக்கவுள்ளதாக அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா இன்று (01) ஊடகவியலாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.

மத்திய கிழக்கு மோதல்கள் இலங்கையின் எரிபொருள் விநியோகத்தைப் பாதிக்காது எனச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் தேவையற்ற அச்சத்தில் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

இன்றைய தினம் விநியோகம் திட்டமிடப்பட்டிருக்கவில்லை என்றாலும், மக்களின் தேவையைக் கருத்திற்கொண்டு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு அழைக்கப்பட்டு விநியோகப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாளை (02) பௌர்ணமி தினத்திலும் விநியோக நடவடிக்கைகள் வழமைபோல முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

எரிபொருள் நிலையங்களில் கலன்களுக்கு (Containers/Cans) எரிபொருள் வழங்குவதை நிறுத்துமாறு அனைத்து நிலைய தலைவர்களுக்கு கடும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

யாராவது எரிபொருளைக் கலன்களில் சேகரித்துச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய முயற்சித்தால், அவர்களுக்கு எதிராகச் சட்டம் மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தலைவர் டி.ஜே. ராஜகருணா எச்சரிக்கை விடுத்துள்ளார்.