ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள தனது இரண்டு தரவு மையங்கள் (Data Centres) அந்தப் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதல்களால் "நேரடியாகத் தாக்கப்பட்டதாக" அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் தரவு மையங்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளை இயக்கி வரும் இந்த நிறுவனம், இந்த தாக்குதல்கள் தனது உள்கட்டமைப்பில் "கட்டமைப்பு சேதத்தை" ஏற்படுத்தியதோடு "மின் விநியோகத்தையும் பாதித்துள்ளதாக" கூறியுள்ளது.
தரவு மையங்கள் ஒரு பிராந்தியத்தில் உள்ள இணையதளங்கள் மற்றும் ஒன்லைன் செயலிகள் போன்ற பல்வேறு வணிகங்கள் மற்றும் இணைய சேவைகளுக்கான தகவல்களைச் சேமித்துச் செயலாக்குகின்றன.
இத்தகைய வசதிகளுக்கு ஏற்படும் எந்தவொரு சேதமும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள தனது வாடிக்கையாளர்கள் உடனடியாகத் தங்கள் தரவுகளைப் பாதுகாப்பாகப் பிரதி (Backup) எடுத்துக்கொள்ளுமாறும், தங்கள் அமைப்புகளை அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா அல்லது பிற இடங்களில் உள்ள AWS தளங்களுக்கு மாற்றுமாறும் அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
