வடக்கு மாகாணத்தில் 'சேவையின் தேவை கருதி' ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திய பின்னரே, வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (11.03.2026) மாலை நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றங்கள், தொடர் வேலைத்திட்டங்கள் மற்றும் நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. மேலும், திட்டங்களை முன்னெடுப்பதில் நிலவும் சவால்களை இனங்கண்டு, அவற்றை எவ்வாறு வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
