மட்டக்களப்பு வவுணதீவில் கிணறு ஒன்றிலிருந்து யுவதி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டமை மற்றும், பெண்ணொருவரின் உடலம் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்கு காவல்துறையின் 07 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு காவல்துறை அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைய, 06 குழுக்களும், மாவட்ட சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைய மற்றுமொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பல சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர், அறிவித்தனர்.
குறித்த சந்தேகநபர்களை கைது செய்வதற்கான தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கிணற்றிலிருந்து உடலமாக மீட்கப்பட்ட பெண், அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியைச் சேர்ந்த 46 வயதான பெண்ணொருவரே உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
குறித்த பெண் காணாமல் போனமை தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் களுவாஞ்சிக்குடி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பெண்ணின் உடலம் மீதான பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
இதேவேளை, குறித்த கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட யுவதி, மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்குப் போதைப்பொருள் அருந்தச் செய்யப்பட்டுள்ளதா? அவமரியாதையான செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளாரா? என்பது தொடர்பில் சட்ட மருத்துவ அறிக்கைகளைப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
26 வயதான குறித்த யுவதியின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே மேலதிக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதுவரையான விசாரணைகளின் அடிப்படையில் காவல்துறையினர் பல்வேறான சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி, திட்டமிட்ட குற்றக்குழுவொன்று, பெண்களைப் பின்தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
அதன்படி, பெண்களிடமுள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்ததன் பின்னர், அவர்களைக் கொலை செய்து அல்லது, சுயநினைவை இழக்கச் செய்து, கிணற்றுக்குள் வீசப்படுவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
