அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு

 


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக இலங்கையின் வாழ்க்கைச் செலவு பாதிக்கப்பட்டுள்ள போதிலும், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பாரியளவில் உயர்வதைத் தடுக்க அரசாங்கம் வர்த்தக சமூகத்தினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.

இது குறித்து வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன கருத்து தெரிவித்துள்ளார்.

இதன்படி சந்தையில் விலைக் கட்டுப்பாடுகளை விதிப்பதை விட, இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் கலந்துரையாடி விலைகளை ஸ்திரத்தன்மையுடன் பேணுவதற்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் தற்போதைய உலகளாவிய நெருக்கடியைச் சாட்டாக வைத்து விலைகளைத் தன்னிச்சையாக உயர்த்துவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.

சந்தையில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க 'லங்கா சதொச' நிறுவனம் ஊடாக அத்தியாவசியப் பொருட்கள் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

உருளைக்கிழங்கு, வெங்காயம் (80%) மற்றும் பருப்பு (100%) ஆகியவற்றிற்கு இலங்கை இறக்குமதியையே நம்பியிருந்தாலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இவை தடையின்றி இறக்குமதியாகின்றன.

ஈரானிலிருந்து இறக்குமதியாகும் நெத்தலி கருவாடு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு மாற்றீடாக மாலைதீவு மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டின் மீன் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது.

இது உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட திட்டமிடப்பட்ட கொள்கை முடிவாகும்.

தேவைப்பட்டால் மட்டுமே மீண்டும் இறக்குமதி குறித்து பரிசீலிக்கப்படும்.

உணவு விநியோகச் சங்கிலியைப் பலப்படுத்தவும், விலைகளை ஸ்திரப்படுத்தவும் ஜனாதிபதியினால் விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையிலான குழு இது தொடர்பாகத் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.