இடமாற்றம் பெறும் மருத்துவர்களின் பிள்ளைகளுக்கான பாடசாலை அனுமதி: பிரதமர் ஹரிணி தலைமையில் விசேட தீர்வு!


இடமாற்றம் பெறும் அரச மருத்துவர்களின் பிள்ளைகளை பாடசாலைகளில் அனுமதிக்கும்போது எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கும் மருத்துவ விசேட நிபுணர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் கலந்துகொண்ட இந்த சந்திப்பில், மருத்துவர்களின் இடமாற்றங்களின் போது அவர்களது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படாத வகையில் புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வைத்தியர் இடமாற்ற நடைமுறைகளின் கீழ், பிள்ளைகளை புதிய பாடசாலைகளில் சேர்ப்பதில் உள்ள நடைமுறைத் தடைகள் குறித்து விசேட நிபுணர்கள் பிரதமருக்கு விளக்கமளித்தனர்.

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பு அவசியமென இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். இதன் மூலமே இப்பிரச்சினைக்கு முறையான தீர்வை வழங்க முடியும் என வலியுறுத்தப்பட்டது.

தற்போதைய அனுமதி நடைமுறைகளை மீளாய்வு செய்து, கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து மிகவும் நடைமுறைச் சாத்தியமான மற்றும் திறமையான அமைப்பொன்றை உருவாக்க இணக்கம் காணப்பட்டது.

அரச மருத்துவர்களின் பிள்ளைகளை பாடசாலைகளில் அனுமதிப்பதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சுகாதார அமைச்சு ஏற்கனவே ஒரு விசேட திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இடமாற்றங்கள் மற்றும் ஏனைய நிர்வாகக் காரணங்களால் ஏற்படும் காலதாமதங்கள் மற்றும் தடைகளைத் தவிர்ப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இந்த புதிய ஏற்பாடுகள் மூலம், நாட்டின் சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இடமாற்றம் பெறும்போது, அவர்களது பிள்ளைகளின் பாடசாலை அனுமதி தொடர்பான கவலைகள் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.