யாழில் சமூக ஊடகத்தில் அவதூறு பரப்பிய மாணவனுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

 

சமூக ஊடகம் ஒன்றில் பாடசாலை மாணவிகளை அவதூறு செய்த பாடசாலை மாணவன் ஒருவரை 14 நாட்கள் சிறுவர் நன்னடத்தை காப்பகத்தில் தடுத்துவைக்க ஊர்காவற்றுறை நிதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.


அத்துடன், குறித்த அவதூறு பரப்பியதை நியாயம் கேட்கச் சென்ற பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர் ஒருவரை கூரிய ஆயுதமொன்றால் வெட்டிக் காயப்படுத்திய குற்றத்துக்காக குறித்த மாணவனின் தந்தையாரையும் 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் வேலணைப் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர், மாணவி ஒருவரது புகைப்படம் மற்றும் இன்னொரு மாணவியின் தாயாரது தொலைபேசி இலக்கத்தையும் "ரிக்ரொக்" சமூக ஊடகத்தில் கீழ்த்தரமான பாலியல் ரீதியான வாசகங்களுடன் பதிவிட்டு அவதூறு பரப்பியிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த அவதூறால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரது உறவினர்கள் அவதூறு பரப்பியவரின் வீட்டிற்குச் சென்று குறித்த மாணவனிடம் இது தொடர்பில் வினவியுள்ளனர்.


இதன்போது, அவதூறு பரப்பிய மாணவனின் தந்தையார் நியாயம் கேட்கச் சென்ற ஒருவரை கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கி காயப்படுத்தால் குறித்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்வாறான பின்னணியில் ஊர்காவற்றுறை சிறுகுற்றப் பிரிவு பொலிஸாரிடம் இரு மாணவிகளின் பொற்றோரும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணையை முன்னெடுத்த ஊர்காவற்றுறை சிறுகுற்றப் பிரிவு பொலிஸார் இருவரையும் கைது செய்து நேற்று(17.03.2026) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.


இந்நிலையில், மாணவனை சிறுவர் சீர்திருத்த மையத்தில் 14 நாட்களும், மாணவனின் தந்தையை 14 நாட்களும் தடுத்து வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.