2026 சிறுபோக நெல் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரங்களைக் கொள்வனவு செய்வதற்காக நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2025 ஒகஸ்ட் 18 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 2025/26 மகா பருவத்திற்கு வழங்கப்பட்ட உர மானியத் திட்டத்தை 2026 சிறுபோகத்திற்கும் தொடரத் தீர்மானிக்கப்பட்டது.
இதனடிப்படையில், வேளாண்மை, நிலம், கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவின் கீழ், நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூபாய் 25,000 வீதம் (ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் இரண்டு ஹெக்டேர் வரை) நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
அத்தோடு, நெல் பயிரிடப்படாத வயல் நிலங்களில் ஏனைய பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் விசேட மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மைப் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைக்கமைய, பருவகாலக் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் அத்தகைய பயிர்ச் செய்கைகளுக்கு ஹெக்டேருக்கு ரூபாய் 15,000 வீதம் (ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் இரண்டு ஹெக்டேர் வரை) நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நாட்டின் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கவும் விவசாயிகளின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கவும் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
