எதிர்காலத்தில் எரிவாயு - எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது - ஜனாதிபதி உறுதியளிப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டுக்கு அதற்கான கேள்வி திடீரென அதிகரித்துள்ளமையே காரணம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் எரிவாயு களஞ்சியப்படுத்தும் வசதிகளில் உள்ள போதாமையே இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் மொத்த எரிவாயு களஞ்சியப்படுத்தும் திறன் 8,000 மெட்ரிக் டன்களாகும். லிட்ரோ நிறுவனத்திற்கு மாத்திரம் நாளொன்றுக்கு 1,000 முதல் 1,200 மெட்ரிக் டன் எரிவாயு தேவைப்படுகிறது.

இதன்படி, நாட்டில் உள்ள இருப்பானது ஆகக்கூடுதலாக ஒரு வாரத்திற்கு மாத்திரமே போதுமானதாகும். இந்தக் களஞ்சியப்படுத்தும் வசதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தற்போது ஒரு பெரிய கப்பல் மாலைதீவில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து சிறிய கப்பல்கள் மூலமே தலா 8,000 மெட்ரிக் டன் எரிவாயு இலங்கைக்குக் கொண்டுவரப்படுகிறது.