ஈரான்-அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தால் ஹோர்முஸ் நீரிணை பகுதியளவில் மூடப்பட்டுள்ள போதிலும், இலங்கையில் தற்போதைக்கு ‘தேசிய எரிசக்தி அவசரகால நிலையை’ பிரகடனப்படுத்தும் உடனடி தேவை இல்லை என்று எரிசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது.
இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள், தற்போதைய நிலையில் அவசரகால நிலையை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "எதிர்கால பாதிப்புகளைக் கணிப்பதை விட, தற்போதைய நிலையில் எரிசக்தி சேமிப்பிற்கே அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகின்றது" என்று தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
