பொதுப் போக்குவரத்தில் பயணிகளுக்கு, குறிப்பாக பெண்களுக்கு இடையூறு விளைவிப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும், பயணிகள் தமது விருப்பப்படி தமக்கான போக்குவரத்து சேவையை தெரிவு செய்ய முழு உரிமை உண்டு எனவும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பாக எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து தனியார் பேருந்தில் மன்னார் வந்தடைந்த இரு பெண்கள், அங்கிருந்து தலைமன்னார் செல்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (இ.போ.ச.) சொந்தமான பேருந்தில் ஏற முற்பட்டுள்ளனர்.
எனினும், அவர்கள் முன்னர் தனியார் பேருந்தில் வந்ததைக் காரணம் காட்டி, குறித்த பேருந்தின் காப்பாளர் அவர்களை பேருந்தில் ஏற்ற மறுத்து இடையூறு விளைவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்களின் முறைப்பாட்டை அடுத்து, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை இவ்விடயத்தில் உடனடியாக தலையிட்டது.
அதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து:சம்பந்தப்பட்ட இ.போ.ச. காப்பாளருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தண்டனைப் பணமாக அவரின் ஒரு நாள் வேதனம் (ஊதியம்) அறவிடப்பட்டுள்ளது.
ஜனநாயக நாட்டில் தாம் விரும்பும் சேவையைத் தெரிவு செய்வது ஒவ்வொரு குடிமகனினதும் அடிப்படை உரிமையாகும்.
குறிப்பாக அதிகாலை வேளைகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது கட்டாயமாகும்" என விமலேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இனிவரும் காலங்களில் சாரதிகள் அல்லது நடத்துநர்கள் பயணிகளிடம் முறையற்ற விதத்தில் நடந்துகொண்டால்பொதுமக்கள் 0719090900 என்ற வாட்ஸ்அப் (WhatsApp இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அனுப்புமாறும்,
பொதுமக்களுக்கான சீரான மற்றும் கௌரவமான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்த அதிகார சபை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளனர்
