ஆண்டு வருமானம் (Turnover) 60 மில்லியன் ரூபாயிலிருந்து 36 மில்லியன் ரூபாயாகக் குறைக்கப்பட்ட போதிலும், இதனால் பொருட்களின் விலைகள் அதிகரிக்காது என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று (24) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை விளக்கினார்.
36 மில்லியன் முதல் 60 மில்லியன் ரூபாய் வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்கள், ஏற்கனவே வாடிக்கையாளர்களிடமிருந்து VAT வரியை வசூலித்தும் அதனை அரசாங்கத்திற்குச் செலுத்தாமல் இருந்துள்ளன.
புதிய நடைமுறை மூலம் இந்தத் தொகை முறையாக வசூலிக்கப்படும்.
இதுவரை VAT வரியின்கீழ் பதிவு செய்யாத நிறுவனங்கள், தாங்கள் செலுத்திய வரிகளைத் திரும்பப் பெற (Claim) முடியாமல் இருந்தது.
இனி அவர்கள் முறையாகப் பதிவு செய்வதன் மூலம் இந்தச் சலுகையைப் பெற முடியும்.
இது புதிய வரியல்ல, மாறாக வசூலிக்கப்பட்டு அரசாங்கத்திற்கு வராத வரியை மீட்கும் ஒரு முயற்சியே ஆகும்.
இதனால் பொதுமக்களுக்கோ அல்லது தனியார் வர்த்தகர்களுக்கோ மேலதிக சுமை ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வரி வலையமைப்பை விரிவுபடுத்துவதன் மூலமும், முறையான விலைப்பட்டியல் (Invoicing) முறையைப் பின்பற்றுவதன் மூலமும் வரி வசூலிப்பு முறை எதிர்காலத்தில் பலப்படும்.
இதன் மூலம் அரசாங்கத்திற்கு அதிக வருமானம் கிடைக்கும் போது, பொதுமக்களுக்கு மேலதிக நிவாரணங்களை வழங்க முடியும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.