கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் விசேட குழுவொன்றை நிறுவ தீர்மானம்

 


இலங்கையின் கல்வி முறையை தற்போதைய அரச கொள்கைகளுக்கு அமைய நவீனமயமாக்கும் நோக்கில், 'கல்விச் சீர்திருத்தங்களுக்கான தேசிய செயற்பாட்டு குழுவை' நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தங்கள், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய மாற்றியமைக்கப்பட்டு, 2026 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், 6ஆம் தரத்திற்கான சீர்திருத்தங்களை 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தச் சீர்திருத்தச் செயல்பாடுகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும், ஒழுங்குபடுத்தவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த குழு அமையவுள்ளது.

குழுவில் அமைச்சர்கள், துறை சார்ந்த நிபுணர்கள், அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் உள்வாங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது