பாலத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் உடலம் மீட்பு

 மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகிலுள்ள வாவியில் இன்று (26) பிற்பகல் ஆண் ஒருவரின் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் மட்டக்களப்பு வாவியில் உடலம் ஒன்று மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் அது குறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் , அங்கிருந்த மீனவர்களின் உதவியுடன் உடலத்தைக் கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.

சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளார். எனினும், உயிரிழந்தவரின் விபரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.