பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்

 


பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிறுத்தைகள் நடமாடுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்கலைக்கழக நிர்வாகம் அவசர பாதுகாப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் அண்மைக்காலமாக சிறுத்தைகள் காணப்பட்டமை மற்றும் அது தொடர்பான சம்பவங்கள் குறித்து மார்ச் 04 ஆம் திகதி நடைபெற்ற பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போதே, இந்த விழிப்புணர்வு அறிவித்தலை விடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டதாகத் துணைவேந்தர் அலுவலகம் வெளியிட்டுள்ள உள்வாரி நினைவூட்டலில் (Internal Memo) தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் பல பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடுவது அவதானிக்கப்பட்டுள்ளதுடன், கால்நடை மருத்துவக் கற்பித்தல் பண்ணையில் (Veterinary Teaching Farm) உள்ள பண்ணை விலங்குகள் மீது சிறுத்தைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் புகார்கள் பதிவாகியுள்ளன.

இந்தச் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பல்கலைக்கழகச் சமூகம் பின்வரும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது


பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடமாடும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுதல்.


குறிப்பாக அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் தனியாக நடப்பதைத் தவிர்த்தல்.


கால்நடை மருத்துவக் கற்பித்தல் பண்ணை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருத்தல்.


சிறுத்தைகளின் நடமாட்டத்தை அவதானிக்கும் பட்சத்தில், அது குறித்து உடனடியாகப் பல்கலைக்கழகப் பாதுகாப்புப் பிரிவினருக்கு (Security Division) அறிவித்தல்.


பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது