2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி முடிவு, எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள கட்டணத் திருத்த முன்மொழிவுகள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் இறுதி அமர்வு நேற்று கொழும்பில் நடைபெற்றது.
இதன் போது கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி ஆரம்பமான இந்தத் தொடர் கலந்தாய்வின் முடிவிலேயே, மார்ச் 31-க்குள் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மின்சாரத் துறையின் நிர்வாகச் சீர்கேடுகளுக்கான விலையை நுகர்வோர் செலுத்தக் கூடாது என வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில்:
"மின்சார நெருக்கடியின் சுமையையும், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததால் ஏற்பட்ட நட்டங்களையும் அப்பாவி மின் நுகர்வோர் மீது சுமத்தக் கூடாது."
எனக் குறிப்பிட்டதுடன், மின்சாரத் துறை சார்ந்து பல முக்கிய சீர்திருத்த முன்மொழிவுகளையும் அவர் முன்வைத்தார்.
முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்நிகழ்ச்சியில் பேசுகையில், தற்போதைய மின் உற்பத்தி மற்றும் விநியோக நடைமுறைகளைக் கருத்தில் கொள்ளும்போது, எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் மீண்டும் மின்வெட்டு ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கை விடுத்தார்.
