யாழில் இருந்து கொழும்புக்கு வர 15 லீற்றர் எரிபொருள்; இதில் எப்படி வந்து சேர்வது! சபையில் குழம்பிய அர்ச்சுனா


யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருவதற்கு 15 லீற்றர் எரிபொருள் தான் வழங்கப்பட்டுள்ளது. வடக்கிலிருந்து கட்டுநாயக்க செல்பவர்கள் அநுராதபுரத்தில் தூங்க வேண்டும். அதன் பின்னர் வடக்கிற்கு திரும்ப கட்டுநாயக்கவில் ஒருவாரம் தூங்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா தெரிவித்துள்ளார். 


பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் எரிபொருள் தொடர்பில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாகனங்களுக்கு தற்போது மட்டுப்படுத்தப்பட்டு எரிபொருள் வழங்கப்படுகின்றது. எங்களுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருவதற்கு 15 லீற்றர் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது. 


நான் அங்கிருந்து வெளிக்கிட்டு நேற்று இரவு அநுராதபுரத்தில் தூங்கிவிட்டு அடுத்த வார எரிபொருளைப் பெற்றுத் தான் கொழும்புக்கு வந்து சேர்ந்தேன்.  


வடக்கிலிருந்து கட்டுநாயக்க பயணிப்பவர்கள் அநுராதபுரத்தில் தான் தூங்க வேண்டும். பின்னர் அங்கிருந்து கட்டுநாயக்க செல்ல வேண்டும். 


அதன்பின்னர் கட்டுநாயக்கவில் ஒருவாரம் தூங்கிவிட்டு அங்கு எரிபொருள் பெற்று பின்னர் வவுனியா வரை வந்தடைவர். 

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எவ்வாறு எரிபொருள் போதுமானதாக இருக்கும் என்று சிந்தியுங்கள் என மேலும் தெரிவித்தார்.


அதற்குப் பதிலளித்த சபாநாயகர் இதனை பாராளுமன்ற குழுச் செயலாளரிடம் தெரிவிக்கின்றேன். இது தொடர்பில் பரிசீலித்து பதில் வழங்கப்படும் என்றார்.


இதேவேளை பொய் பெரேரா என்று பாராளுமன்ற உறுப்பினருக்கு பெயரை சூட்ட முடியும் என்றால் பொய் அநுர என்றும் கூறமுடியும். இன்றுவரையும் அவர்கள் பொய்யைத் தான் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். தயவு செய்து அதை நீக்கி உறுப்பினர் ஒருவரை அவ்வாறு சொல்ல வேண்டாம் எனக் கேட்கின்றேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா தெரிவித்தார்