தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று மாலை ஆளுநர் மாளிகைக்குச் சென்றார்.
அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து, தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதத்தை வழங்கினார்.
இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், விஜய் ஆட்சி அமைக்க முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம், “சி. ஜோசப் விஜய் எனும் நான்…” என்று அவர் முதலமைச்சராகப் பதவியேற்கும் தருணத்திற்காகத் தமிழகமே ஆவலுடன் காத்திருக்கிறது.
பதவியேற்பு விழாவை மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் மே 7-ஆம் தேதி (நாழைய மறுநாள்) காலை 10 மணி அளவில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் அல்லது மெரினா கடற்கரையில் உள்ள ஒரு திறந்தவெளி மைதானத்தில் இந்த விழா நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கான முன்னேற்பாடுகளைத் தமிழக அரசின் பொதுப்பணித் துறை மற்றும் காவல்துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர். இந்த விழாவில் பங்கேற்கப் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விஜய்யுடன் சேர்த்து சுமார் 15 முதல் 20 அமைச்சர்கள் முதல் கட்டமாகப் பதவியேற்க வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பல்வேறு சமூகத்தைச் சார்ந்த பிரதிநிதிகளுக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக-விற்கு ஆதரவளித்த கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்படுமா அல்லது அவர்கள் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பார்களா என்பது குறித்த இறுதிப் பட்டியல் நாளை வெளியாகும் என்று தெரிகிறது.
பனையூர் அலுவலகத்தில் இதற்கான இறுதி ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, விஜய் தனது முதல் கையெழுத்தாக மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான கோப்புகளில் அவர் கையெழுத்திட வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய அரசியல் சக்தியின் உதயம் நிகழ்ந்துள்ளதால், விஜய்யின் பதவியேற்பு விழாவை ஒரு மாபெரும் திருவிழாவாகக் கொண்டாட அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.
