மார்பக புற்றுநோய் சிகிச்சையில் 'சொக்கத் தங்கம்' பட நடிகை உமா சங்கரி! உருக்கமான பதிவு


 சொக்கத் தங்கம்' திரைப்படத்தில் விஜயகாந்தின் தங்கையாக நடித்த நடிகை உமா சங்கரி, மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நம்பிக்கையூட்டும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான சுமித்ராவின் மூத்த மகள் தான் உமா சங்கரி. 1975 முதல் 1986 வரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சுமித்ரா, 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர், பின்னர் கேரக்டர் வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அண்மையில் வெளியான 'வலிமை' திரைப்படத்தில் அஜித்தின் தாயாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து, கன்னட இயக்குநர் ராஜேந்திர பாபுவை சுமித்ரா திருமணம் செய்து கொண்டார். 

இந்தத் தம்பதிக்கு உமா சங்கரி மற்றும் நக்ஷத்ரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

 இவர்களில் மூத்த மகளான உமா சங்கரி, இயக்குநர் சீமான் இயக்கிய 'வீரநடை' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து 'சொக்கத் தங்கம்', 'கடல் பூக்கள்', 'தென்றல்', 'கோவை பிரதர்ஸ்', 'சூரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

 குறிப்பாக, கே. பாக்யராஜ் இயக்கிய 'சொக்கத் தங்கம்' திரைப்படத்தில் விஜயகாந் தங்கை கதாபாத்திரம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

அதன் பின்னர் 'கடல் பூக்கள்', 'தென்றல்' போன்ற படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்தில் 'குபேரன்', கன்னடத்தில் 'உப்பி தாதா MBBS' உள்ளிட்ட வெற்றிப்படங்களிலும் நடித்தார்.

 பின்னர் திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததால் சின்னத்திரைக்கு மாறிய அவர், தமிழில் பிரபலமான 'சித்தி' தொடரின் கன்னட ரீமேக்கிலும் நடித்தார்.

2006 ஆம் ஆண்டு துஷ்யந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர், அதன் பிறகு திரைப்படங்களிலிருந்து விலகினார்.

 கடைசியாக 'ரசிகர் மன்றம்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், உமா சங்கரிக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்காக அவர் தற்போது இரண்டாவது கட்ட கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள உமா சங்கரி, கடந்த சில நாட்கள் மிகவும் சவாலானதாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்தப் போராட்டத்தை முழு நம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் எதிர்கொண்டு வருவதாகவும், தனக்கு தொடர்ந்து அன்பும் ஆதரவும் வழங்கி வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மேலும், விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவேன் என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



Post a Comment