முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் 600 ஆயுதங்கள் பறிமுதல்; நாஜி கொடிகளுடன் மர்ம அறை – குழந்தைகள் மீதான வன்கொடுமை வழக்கில் சிக்கியவரின் பகீர் பின்னணி!

 

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷையர் (Cambridgeshire) பகுதியைச் சேர்ந்த 52 வயதான முன்னாள் ராணுவ வீரர் பால் பேஜ் (Paul Page). இவர் ஏற்கனவே குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கி, காவல்துறையின் கண்காணிப்பில் இருந்து வந்தவர். இந்நிலையில், இவரது வீட்டில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், வீட்டின் வெளிப்புற அறையை (Shed) ஒரு மர்மமான “ஆயுதக் கிடங்காக” மாற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அறையில் இரண்டாம் உலகப் போர் காலத்து ஆயுதங்கள் முதல் நவீன ரக துப்பாக்கிகள் வரை மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன.

அந்த மர்ம அறையில் (Man Cave) சுமார் 600-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் இருந்தன. இதில் நிலக்கண்ணி வெடிகள் (Landmines), கைக்குண்டுகள் (Grenades), துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்து தயாரிக்கப் பயன்படும் வேதிப்பொருட்கள் ஆகியவை அடங்கும். மேலும், அந்த அறை முழுவதும் நாஜி ஜெர்மனியின் கொடிகள் மற்றும் அடால்ஃப் ஹிட்லரின் கொள்கைகளைத் தாங்கிய பொருட்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்த முன்னாள் வீரரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் உடலில் இருந்த பச்சை குத்தல்கள் (Tattoos) அவர் தீவிர வலதுசாரி மற்றும் வெள்ளை இனவாதக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர் என்பதை உறுதிப்படுத்தின.

நீதிமன்ற விசாரணையில், பால் பேஜ் இந்த அறையைத் தனது “தனிப்பட்ட அருங்காட்சியகம்” என்று கூறி தப்பிக்க முயன்றார். ஆனால், குடியிருப்புப் பகுதியில் இது போன்ற வெடிபொருட்களைப் பதுக்கி வைத்திருப்பது மிகப்பெரிய ஆபத்து என்று நீதிபதி ரிச்சர்ட் மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, வெடிமருந்து தயாரிப்பது குறித்த தடை செய்யப்பட்ட ஆவணங்களையும் அவர் பதிவிறக்கம் செய்திருந்தது கண்டறியப்பட்டது. 2006-ம் ஆண்டு அமெரிக்காவிலும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றத்திற்காக இவர் தண்டிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதம், வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் பால் பேஜிற்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. “இந்த ஆயுதங்கள் திருடப்பட்டு தவறான கைகளில் சிக்கியிருந்தால், அதன் விளைவுகள் மிக மோசமாக இருந்திருக்கும்” என நீதிபதி எச்சரித்தார். ஒரு முன்னாள் ராணுவ வீரர், அதுவும் பாலியல் குற்றப் பின்னணி கொண்ட ஒருவர், இவ்வளவு பெரிய ஆயுதக் கிடங்கை ரகசியமாகப் பராமரித்து வந்தது பிரிட்டன் காவல்துறையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Post a Comment